பெரியாரின் 148-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது படத்துக்கு முதல்வர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். | சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை: பெரியார் பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பெரியாரின் 148-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் பெரியார் படத்துக்கு முதல்வர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் தலைமையில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு துறைச் செயலர்கள், காவல் துறை மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், ராஜ்மோகன், வன்னி அரசு, மரிய வில்சன், குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் புகழாரம்: அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
முதல்வர் விஜய்: சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களையவும், மக்களின் உரிமைகளை மீட்கவும் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகள், கொள்கைகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின்: வெளிச்சமற்ற இடம் இருள். கேள்விகளற்ற சமூகம் அதைவிட பேரிருள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற சமூகநீதிப் பாதையை தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.