படங்கள்: என்.கணேஷ்ராஜ்

தமிழகம்

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் சின்னமனூர் வந்தடைந்தது!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வேளாண் பணிகள் மும்முரம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட நீர் இன்று (ஆக.18) காலை சின்னமனூர் பகுதி கண்மாய்கள், விளைநிலங்களுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து வேளாண் பணிகள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் அளவுக்கு இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போகத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் நீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மழையில்லாததால் 68 நாட்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நீர் தலை மதகு பகுதி முதல் சின்னவாய்க்கால், வைரவன் வாய்க்கால் உள்ளிட்ட 17 வாய்க்கால்கள் வழியே வழி நெடுகிலும் உள்ள குளம், கண்மாய்களை நிரப்பி வருகிறது. இந்நிலையில், இந்த நீர் கம்பம் பள்ளத்தாக்கின் மத்திய பகுதியான சின்னமனூர் எல்லைக்குள் இன்று வந்தடைந்தது.

உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் இருந்து சின்னவாய்க்கால் வழியே வந்த இந்த நீர் பூலானந்தபுரம் செங்குளத்தை இன்று காலையில் வந்தடைந்தது. இந்த நீரோட்டத்தினால் கம்பம் பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு நீர் சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு உழவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதேவேளையில் கிழக்குப் பகுதி விளைநிலங்களான கரட்டான் குளம், தாமரைக் குளம் உள்ளிட்ட பகுதி விளை நிலங்களுக்கு இன்னமும் பாசனநீ்ர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் வேளாண் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராசாமணி கூறுகையில், “தாமதமாக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

அணை நீர் தற்போதுதான் விளை நிலங்களுக்குள் வந்துள்ளது. உழவு செய்து நாற்றாங்கால் பாவி, விரைவில் நடவுப்பணி நடைபெறும். தாமதமான நீர்வரத்தினால் இந்த ஆண்டு இரண்டாம் போக சாகுபடி பாதிக்கும் நிலை உள்ளது” என்று கூறினார்.

SCROLL FOR NEXT