பெரியகருப்பன்
காரைக்குடி: திருப்பத்தூரில் ஒரு வாக்குவித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தோல்வியடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது 4 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. ஒரு இயந்திரத்தை மட்டுமே பொறியாளர்கள் சரி செய்தனர். மூன்றைப் பழுதுநீக்க முடியாததால் அவை தனியாக எடுத்து வைக்கப்பட்டன.
27-வது சுற்று முதல் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனும் தவெக வேட்பாளர் சீனிவாசசேதுபதியும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளைவிட, வித்தியாசம் குறைவாக இருந் தது. இதனால், பழுதடைந்த இயந்திரங்களுக்குரிய வி.வி.பாட் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. இதில் கேஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகள், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்றனர். இதில் 1 வாக்குவித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதனால் மறுஎண்ணிக்கை நடத்த திமுக தரப்பில் கோரப்பட்டது. அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.இதனால் இரு தரப்பிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் செல்லாத வாக்குகளை அதிகாரிகள் மறுஆய்வு செய்தனர். இதில், செல்லத்தக்க வாக்குகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தவெக ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவபாலன் அறிவித்தார். இதனால் அதிகாலை 1.15 மணி வரை பரபரப்பு நீடித்தது.