பெரியகருப்பன்
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளரான பெரிய கருப்பனை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று பெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தவெக எம்.எல்.ஏ. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்தது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.