சென்னை: முதல்வர் விஜய் தனது பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை இன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் பட்டாக்களை வழங்குகிறார். மேலும், தொகுதி சார்ந்த புகார்களை தெரிவிக்க பிரத்யேக செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினமா செய்தார்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அரசு சேவைகளை எளிதாக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்முறையாக பெரம்பூருக்கு முதல்வர் விஜய் இன்று (13-ம் தேதி) மாலை 3 மணிக்கு செல்கிறார்.
அப்போது, தனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். மேலும், இந்த விழாவின் மிக முக்கிய அம்சமாக தொகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
குறிப்பாக, தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் வழங்குகிறார். இது அப்பகுதி எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பத்தை மக்கள் சேவையில் புகுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, ‘மக்கள் சேவை தளம்’ என்ற புதிய மொபைல் செயலி இவ்விழாவில் முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.
இச்செயலியின் மூலம், பொதுமக்கள்தங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற குறைகளை நேரடியாகப்பதிவு செய்யலாம்.
மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதன் தகுதிகள் குறித்த விவரங்களை மக்கள் எளிதில் அறிந்துக் கொள்ளவும், தங்களின் புகார்களின் தற்போதைய நிலையை போன் மூலமாகவே கண்காணித்துக் கொள்ளவும் இந்தச் செயலி வழிவகை செய்கிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, பெரம்பூர் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
தனது சொந்த தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள இந்த விழா, பெரம்பூர் தொகுதி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.