பூர்வீக சென்னை என்றழைக்கப்படும் வட சென்னையில் பெரம்பூர் தொகுதி இடம்பெற்றுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக இத்தொகுதி உள்ளது. மேலும், கால்பந்தாட்ட வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள், கானா பாடகர்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இத்தொகுதியில் வியாசர்பாடி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி ஆகிய முக்கிய வருவாய் கிராமங்கள் உள்ளன.
இத்தொகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வடமாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. அதிலும் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளனர். பூர்வீகமாக தலித்துகள் அதிகளவில் வசிக்கின்றனர். அந்த வகையில் மொத்த வாக்காளர்களில் சுமார் 30 சதவீதம் தலித்துகள் உள்ளனர். எனவே, இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தலித்துகள் உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
மாநகரில் தினமும் சேகரமாகும் சுமார் 3 ஆயிரம் டன் குப்பை, இத்தொகுதியில் 333 ஏக்கர் பரப்பளவிலான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் தான் கொட்டப்படுகிறது.
கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய் ஆகியவற்றில் 365 நாட்களும் சாக்கடை நீர் ஓடுவதை தடுக்காததால், கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கால் ஏற்பட்ட நிலத்தடி நீர் பாதிப்பு, மணலியில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் பாதிப்பு உள்ளதா என அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாதது, குப்பை கிடங்கில் ஏற்படும் தீயால் உருவாகும் புகை மாசு போன்றவை இப்பகுதியின் பெரும் பிரச்சினைகளாக உள்ளன.
இதுவரை 16 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தலை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில் 9 முறை திமுக, 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலா 2 முறை அதிமுக, சுயேச்சைகள், ஒரு முறை காங்கிரஸ் வென்றிருப்பதால், இத்தொகுதி பெரும்பாலான காலங்களில் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது.
வேட்பாளர்கள் பின்புலம்
கடந்த 2001, 2006, 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெரம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. அக்கட்சி இடம்பெற்ற கூட்டணியே ஆட்சியிலும் இருந்தது. 2016-ல் அதிமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் வெற்றி பெற்றார்.
அதிமுகவும் 2-வது முறை ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறது, அதிமுக உடைந்தபோது, அவர் அமமுகவுக்கு சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர் தொகுதியை வசமாக்கினார்.
இருப்பினும் எதிர்க்கட்சியாக இருந்ததால் தொகுதிக்கு அவரால் எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. தொடர்ந்து, 2021 தேர்தலில் 2-வது முறையாக ஆர்.டி.சேகர் வெற்றி பெற்று ஆளுங்கட்சி எம்எல்ஏவான பின்னர் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் சீரமைப்பு, விளையாட்டு திடல்கள் மேம்பாடு, குத்துச்சண்டை அரங்கம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பழைய குப்பைகளை அகற்றி, இடத்தை மீட்டெடுக்கும் பணிகள், முதல்வர் படைப்பகம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்த தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் ஆர்.டி.சேகர் களம் காண்கிறார். தவெக தலைவர் விஜய்யும் இத்தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி விவிஐபி தொகுதியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டபோது, சுமார் 3,500 வாக்குகளே கிடைத்தன. பாமகவைப் பொருத்தவரை இத்தொகுதியில் பெரிய வாக்கு வங்கி இல்லை.
அதிமுக மற்றும் பாஜகவை நம்பியே பாமக களத்தில் இறங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை எந்த அளவுக்கு பெறுகிறார் என்பதைப் பொறுத்தே அவரின் வெற்றிவாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், கடந்த தேர்தலில் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை அவருக்கு கூடுதல் பலத்தை தந்தாலும், விஜய்யின் வருகை, அவரின் நட்சத்திர வெளிச்சம், புதிய வாக்காளர்களின் தாக்கம் ஆகியவற்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
வேட்பாளர்கள் பின்புலம்
ஆண் - 1,07,995
பெண் - 1,14,726
மூன்றாம் பாலினத்தவர் - 71
மொத்த வாக்காளர்கள் - 2,22,792