மத்திய பட்ஜெட்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. இதற்காக பாஜகவுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சிஎம்டிஏ சார்பில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் ரூ.11.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் அவ்வளாகத்தில் 6 நியாய விலைக் கடைகள், கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அத்துடன்,ரூ.39 கோடி மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது முதல்வர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வரவில்லையே?
மத்திய பட்ஜெட்டில் வெறும் ஏமாற்றம்தான். மாற்றம் வரும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.
இது தேர்தல் ஆண்டு. இருந்தாலும் பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லையே?
இதற்கு மக்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கப்படும்?
விரைவில் தொடங்குவோம்.
கூட்டணி கட்சிகளுடன் பேச குழு எப்போது அமைக்கப்படும்?
விரைவில் குழு அமைக்கப்படும்.
அரசியலில் புதிய எதிரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை.
இருந்தாலும், திமுகவை தொடர்ந்து விமர்சிக்கிறார்களே?
அவர்களையும் நண்பர்களாகப் பார்க்கிறேன். மரியாதை கொடுக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிலளித்தார். நிகழ்வின் போது, அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர்.ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.