தமிழகம்

“விஜய் வரும் காலத்தில் பிரதமர் ஆவார் என மக்கள் நினைக்கின்றனர்” - தவெக எம்எல்ஏக்கள் பேச்சு

அ.முன்னடியான்

புதுச்சேரி: தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதனை இந்தியா முழுவதும் மக்கள் விரும்புகின்றனர். ஆகவே வரும் காலத்தில் விஜய், பிரதமராக வருவார் என மக்கள் விரும்புவதாக புதுச்சேரி தவெக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி தவெக எம்எல்ஏக்கள் சாய் ஜெ. சரவணன்குமார், ராமு ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. வரவேற்கத்தக்கது.

அப்படிப்பட்ட சிறப்பான விழாவில் தேசிய கீதம் பாடப்படும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இதுபோன்று வருங்காலத்தில் நடக்கக்கூடாது. தமிழக முதல்வர் விஜய் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று சொன்னாரோ, அதுபோன்று புதுச்சேரி அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்னார். பிரதமரும் தமிழ்தான் சிறந்தமொழி, மூத்தமொழி என்று கூறியுள்ளார். எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா அரசு விழாக்களிலும் முதலில் பாடப்பட வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் வீதியில் இறங்கி போராடி தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா இடங்களிலும் பாட வைப்போம். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை தவெக தலைவர் விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார். அதனை இந்தியா முழுவதும் விரும்புகின்றனர்.

எனவே, வரும் காலத்தில் தமிழக முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர். அடுத்த தேர்தலில் தவெக தேசிய கட்சியாக வலுப்பெறும் என்பது உறுதி. தமிழகத்தில் தவெக-திமுக இடையே தான் போட்டி. ஆனால் புதுச்சேரியில் ஒரே கட்சிதான் உள்ளது. அது தவெக தான்” என்றனர்.

ராமு கூறும்போது, “புதுச்சேரியில் பாஜகவில் இருந்து மட்டுமல்ல திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருப்பவர்களும் வந்து இணைய தயராக இருக்கின்றனர். வந்து இணைவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT