வருசநாடு: வனப்பகுதியில் இருந்து தங்களை வெளியேற்ற கூடாது என்று வருசநாடு, மேகமலை பகுதி மக்கள் 3-ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நாளை இது குறித்த முக்கிய உத்தரவுகள் வர வாய்ப்புள்ளதால் வனக் கிராமங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு காந்திகிராமம், வீருசின்னம்மாள்புரம், சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி , உள்ளிட்ட 98 வன கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், புலிகள் காப்பகமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டதால் வனத்தை விட்டு வெளியேற நீதிமன்றம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 26-ம் தேதி முதல் மலைகிராம மக்கள் ஒருங்கிணைந்து கடமலைக்குண்டுவில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்குக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தங்களுக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்து கிராம மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர்.
மூன்றாம் நாளான இன்று கடமலைக்குண்டு அனைத்து வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் பேரணியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மலைவாழ் மக்கள் இரவும், பகலும் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரியில் தொடங்கி குஜராத் வரை அமைந்துள்ளது. எந்த இடத்திலும் இது போன்றுமலைவாழ் மக்களை வெளியேற்றியதில்லை. மரம் வளர்ப்பு, வன பாதுகாப்பு என்றே வாழ்ந்து விட்டோம். எங்கள் மூதாதையர் வாழ்ந்ததுக்கான பல்வேறு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. நீதிமன்றம் இந்த உண்மையை உணர்ந்து எங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
நாளை உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணை நடைபெற உள்ளதால் நான்காம் நாளான நாளை போராட்டத்தை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அதிகளவில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். மேலும், உசிலம்பட்டியில் இருந்து போராட்டக் களம் வரை இருசக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளது.