கோப்புப் படம்
சென்னை: பதிவுத் துறையில் ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி மக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களை ஸ்டார் 3.0 இணையதளத்தில் எளிமையான 4 படிநிலையில் உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TNREGINET (www.tnreginet.gov.in) இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிய ஆவணங்களை ‘காகிதமில்லா பதிவுமுறை’ வழி தாங்களே பதிவுக்கு சமர்ப்பிக்கலாம்.
இணையதளத்தில் தங்கள் உள்நுழைவைத் தாங்களே உருவாக்கி ஆவணங்களை இணையவழி பதிவுக்கு சமர்ப்பிக்கும் எளிய படிநிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
TNREGINET (www.tnreginet.gov.in) இணையதளத்தில் உள்நுழைந்ததும் ஆவணப் பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உருவாக்க விரும்பும் ஆவண வகையை தேர்வு செய்ய வேண்டும்.
விற்பவர், வாங்குவோர், சாட்சி விவரங்கள், சொத்து மற்றும் பிற விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அப்போது ஒரு ‘டிபி’ எண் வழங்கப்படும். பிறகு, உங்கள் ஆவணத்தை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், ஆன்லைன் வழி செலுத்துக என்பதை தேர்வு செய்து கட்டணம் செலுத்தலாம். பிறகு, காகிதமில்லா ஆவணப் பதிவுக்கான வரைவு ஆவணச் சுருக்கம் என்பதை தேர்வு செய்து, ‘டிபி’ எண்ணை உள்ளீடு செய்து ஆவணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் ஒருமுறை கடவுச்சொல் மூலம் இ-சைன் செய்யப்பட வேண்டும். பின்னர் தங்களுக்கு தேவையான நாள், நேரத்தை தேர்வு செய்து முன்பதிவு டோக்கன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நேரத்தில், விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அங்கு அடையாளம் சரிபார்ப்பு செய்து, ஆவணத்தில் இ-சைன் மூலம் கையொப்பமிட்டு, பதிவு செய்யப்பட்ட ஆவணம் திருப்பி அனுப்பப்படும்.