திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை நீடிப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கட்டணமில்லா கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் 8 பகுதிகள், அதிகளவில் பாதிப்பு ஏற்படும் 39 பகுதிகள், மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய 44 பகுதிகள், குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய 42 பகுதிகள் என, 133 பகுதிகளில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய 64 குழுக்களைச் சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு குழுக்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் திருப்பாலைவனம், ஆண்டார் மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் எளாவூர் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 674 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை, வெள்ளம் தொடர்பாக தங்கள் புகார்கள், மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044-27664177, 044-27666746, 044-27660035, 044-27660036 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டுறை அறை வாட்ஸ் ஆப் எண்கள் 9444317862, 9498901077 ஆகியவற்றையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை முதல், கன மழை, மிதமான மழை, லேசான மழை என, பெய்து வருகிறது. இன்று காலை 6 மணிமுதல், மாலை 5 மணிவரை, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் மிக கனமழையாகவும், கும்மிடிப்பூண்டி, ஆவடியில் கனமழையாகவும், ஜமீன் கொரட்டூர், பூந்தமல்லி, பூண்டி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் மிதமான மழையாகவும் கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் தேங்கியது. குறிப்பாக, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பூந்தமல்லி- ஆவடி சாலையில், சென்னீர்குப்பம் பகுதியில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாயினர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் அணுகுசாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால், பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்; பொன்னேரியில், பழவேற்காடு சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரை, பள்ளி மாணவ - மாணவியர் பொக்லைன் இயந்திரத்தில் ஆபத்தான முறையில் பயணித்து கடந்தனர்.
டிட்வா புயல் காரணமாக பழவேற்காடு மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளில் தரைக் காற்று கடுமையாக வீசியது. அப்பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளும் சீற்றத்துடன் காணப்பட்டன.