தமிழகம்

மதுரையில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி - மின்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடரும் குளறுபடிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் அறிவிக்கப்படாத மின் தடையால் சமீப காலமாக மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்து கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லத் தயாராகும்போது ஏற்படும் மின் தடையால் மாணவர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகின்றனர். ஆன்மிக, சுற்றுலா நகரம், மருத்துவத் தலைநகரம் போன்ற சிறப்புகளால் மதுரை மாநகரில் தடையற்ற மின் விநியோகத்துக்காக பல்வேறு மின் கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும் சமீப நாட்களாக மாநகரப் பகுதியான சிம்மக்கல், அரசரடி, ஆரப்பாளையம், கோச்சடை, விளாங்குடி, செல்லூர், அய்யர் பங்களா, ஆனையூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

இரவில் மின் தடை ஏற்படுவதால் கொசுக்கடி மற்றும் காற்றோட்ட மின்றி தூங்க முடியாமல் விழித் திருப்பதால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கிறது. அவர்கள், மறுநாள் தேர்வுக்கு படிக்க முடியவில்லை. வேலைக்குச் செல்வோரும் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கமும், புழுக்கமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், இரவில் மின்சாரம் இல்லாமல் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும், காலை நேரங்களில் குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குப் புறப்படும் நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியவி்ல்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்களைத் தவறவிடுவதால் கல்வி பாதிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தின் தண்டனைக்கு ஆளாகின்றனர்.

மின்தடைக்கான காரணத்தை அறிவதற்கு மின்வாரிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை எத்தனைமுறை தொடர்பு கொண்டாலும் சரிவர பதில்கள் கிடைக்கவில்லை. எதனால் மின் தடை? எப்போது மின் தடை சீராகும்? என்ற தகவல்களை அறிய முடியாமலும், அதற்கேற்றவாறு ஆயத்தமாக முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், `தமிழகத்திலேயே மதுரையில்தான் அதிக வெப்பம் பதிவாகிறது. பகலில் அலைந்து திரிந்து இரவில் நிம்மதியாக உறங்கலாம் என நினைக்கும் மக்களுக்கு மின்சாரத் துறையினர் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

மின்சாரம் எப்போது போகும், வரும் எனத் தெரியவில்லை. இதனால் வீடுகளில் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மின்வாரியக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே தடையற்ற மின்சாரம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மற்ற அனைத்து துறை கேள்விகளுக்கும், குறைபாடுகளுக்கும் பதில் சொல்லும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், அவரது சொந்த மாவட்டத்தில் நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT