தமிழகம்

திரைத்துறை பன்முக வித்தகர் கே.பாக்யராஜ் மறைவு: தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், சீமான், திருமாவளவன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்ட பிரபலங்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

‘திரைக்கதை மன்னர்’ என புகழப்படும் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்த பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பாக்யராஜ் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள். திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜ் உடலுக்கு நாளை காலை 9.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

பாக்யராஜ் உயிரிழந்த செய்தி அறிந்ததும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு நடிகர் பார்த்திபன் முதல் ஆளாக வந்தார். அதன்பின்னர் அங்கு நடிகைகள் சுஹாசினி, ராதிகா, ஸ்ரீபிரியா, நடிகர் சரத்குமார், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர்.

அப்போது சுஹாசினி கூறுகையில், “ கோவாவில் குஷ்பு மகளின் திருமணத்தில் பாக்யராஜ் மிக மகிழ்ச்சியாக கலந்துகொண்டார். நாங்கள் அனைவரும் நேற்று மாலை தான் வந்தோம். ஆனால், அவர் நேற்று முன்தினமே சென்னை வந்துவிட்டார். மிக மகிழ்ச்சியாகத் தான் இருந்தார். இன்று காலை நடைபயிற்சிக்கு சென்று திரும்பி வரும்போது, நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவரின் உயிர் பிரிந்தது. சிரித்துக்கொண்டே இருந்தவர், சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். இது திடீரென நடந்த விஷயம். குறைந்த வயதில் அவர் உயிரிழந்துள்ளார்” என்றார்.

பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். பார்த்திபன் பேசும்போது, “என் வாழ்க்கையின் மிகவும் துக்கமான நாள்” என்று கண் கலங்கினார். பாண்டியராஜன் கூறுகையில், “இன்று நான் மனுஷனா வாழறது அவராலதான்” என்று கண்ணீருடன் சொன்னார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி:

தமிழக முதல்வர் விஜய், பாக்யராஜின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதோடு, பாக்யராஜின் மகன் சாந்தனுவை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

பாக்யராஜின் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், திமுக எம்.பி கனிமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரை பிரபலங்கள் அஞ்சலி:

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், சத்யராஜ், ராமராஜன், மோகன், பிரபு, அர்ஜுன், விஜயகுமார், ஜெயராம், தனுஷ், விக்ரம் பிரபு, நாசர், பிரசாந்த், கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலிகான், பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், ரமேஷ் கண்ணா, ராதா ரவி, எஸ்.வி.சேகர், சார்லி, சின்னி ஜெயந்த், ஜீவா, விமல், பரத், சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், அருள்நிதி, தம்பி ராமையா, மலையாள நடிகர் திலீப் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சேரன், அமீர், கரு.பழனியப்பன், பி.வாசு, தியாகராஜன், மணிரத்னம், பாலா, வசந்த், கவுதமன், ராஜேஷ், பேரரசு, லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத், லிங்குசாமி, ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் சினேகன், நடிகைகள் கே.ஆர்.விஜயா, அம்பிகா, நளினி, சினேகா, சி.ஆர்.சரஸ்வதி, கோவை சரளா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT