தமிழகம்

‘கே.பாக்யராஜ்... தமிழ்த் திரையுலகின் பன்முக ஆளுமை!’ - தலைவர்கள் புகழஞ்சலி

வெற்றி மயிலோன்

சென்னை: பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதல்வர் விஜய்:

“தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்.

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

“ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம். இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதல்வராக மட்டுமின்றி, அவரது ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்”.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

“பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற எம்ஜிஆரின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். எம்ஜிஆரும் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”

நடிகர் ரஜினிகாந்த்:

“ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் பாக்யராஜ். அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.”

மநீம தலைவர் கமல்ஹாசன்:

“கே.பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.”

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:

“தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன.

எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.

அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்”.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்:

“அண்மையில் காலமான பாரதிராஜாவின் முதல் படமான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில், அவரது உதவியாளராக திரையுலகில் நுழைந்தவர் பாக்யராஜ். தொடர்ந்து வசனக் கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, தனது தனி முத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார்.

திரைத் துறையில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் கால்பதித்து நடைபோட்டவர். அஇஅதிமுக உறுப்பினராக இணைந்து செயல்பட்டவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சி அமைத்து செயப்பட்டவர். இந்தக் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, அங்கிருந்து விலகி திமுகழகத்தில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார். பிறகு கட்சி சார்ந்த அரசியலில் இருந்து விலகிவிட்டார்.

பத்திரிகையாளராக, “பாக்யா” மாத இதழ் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். கொங்கு நாட்டு பேச்சு வழக்கில், அவரது இயல்பான பேச்சு பலரையும் பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது. பாக்யராஜிடம் பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் போன்றோர் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்து வருகின்றனர்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்:

“கிராமிய வாழ்க்கையை மையமாக கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பாக்யராஜ். ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு கருத்துக்களையும், விழுமியங்களையும் எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: “தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாகத் திகழ்ந்த பாக்யராஜ், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர். அவர் இயக்கிய மற்றும் நடித்த தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பல வெள்ளி விழா திரைப்படங்களாக அமைந்துள்ளன. அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகும் உயர்ந்த பண்பாளர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.”

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தனது படைப்பாற்றலால் நகைச்சுவை உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கவை. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.”

வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை:

“சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, கே.பாக்யராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.”

தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி

பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்த பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பாக்யராஜ் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய், பாக்யராஜின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதோடு, பாக்யராஜின் மகன் சாந்தனுவை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT