கோப்புப் படம்
சென்னை: ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தாண்டு ஆடி அமாவாசை நாளை புதன் கிழமை கடைபிடிக்கப்படவுள்ளது. ஆடி அமாவாசை தமிழ் மக்களுக்கு முன்னோர்களை வழிபடும் மிக முக்கியமான நாளாகும்.
இந்த நாளில் ராமேசுவரம், கன்னியாகுமரி, தேவிபட்டினம் போன்ற நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இதனிடையே தமிழகம் மற்றும் பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று ராமேசுவரத்துக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆடி அமாவாசை தினத்தில் ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் மறுநாள் ராமேசுவரத்திலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என பயணிகள் சிலர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்கும்போது, “இந்த ஆண்டு முக்கிய நகரங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யவில்லை.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இயங்கும். மேலும் திருச்சியில் இருந்து அதிகளவில் ராமேசுவரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது, மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்” என தெரிவித்தனர்.