நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல்.
நாகப்பட்டினம்: நாகை- இலங்கை இடையே இயக்கப்படும் கப்பலின் இன்ஜின் பழுதானதால் நடுக்கடலில் 144 பயணிகள் சுமார் 7 மணி நேரமாக தவித்தனர். இதையடுத்து, படகு மூலம் கயிறு கட்டி கப்பல் கரைக்கு இழுத்து வரப்பட்டது.
நாகை- இலங்கை காங்கேசன்துறை இடையே தனியார் நிறுவனம் சார்பில் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 3 மணி நேர கடல் பயணம் என்பதால் இந்திய, இலங்கை சுற்றுலா பயணிகள் இந்த கப்பலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிளவில் இலங்கை காங்கேசன்துறையில் இருந்து 141 பயணிகளுடன் இந்தக் கப்பல் நாகை நோக்கி புறப்பட்டது.
நடுக்கடலில் வந்தபோது இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, கப்பல் ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் நடுக்கடலில் சுமார் 7 மணி நேரமாக தவித்த பயணிகள் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதுதொடர்பாக நாகை துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீன்பிடி படகுகளை எடுத்து வந்த மீனவர்கள், பயணிகள் கப்பலை கயிறு கட்டி துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.
இதனால், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வர வேண்டிய கப்பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனைவருக்கும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தபிறகு, அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நாகை- இலங்கை இடையேயான இருவழி கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அவ்வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.