சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி, ஒருதலைபட்சமாக அணைக்கட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது.
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழக காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: காவிரி நடுமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, கர்நாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.