திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.
சென்னை: திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அரசியல் கட்சியினர், தமிழக மக்களின் பாதுகாப்பை பற்றி திமுகவுக்கு கவலையில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: திருப்பூரில் 8 தீவிரவாதிகளை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி போலீஸார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீஸார் என்ன செய்துகொண்டு இருந்தனர், தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. ஆனால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
பயங்கரவாதத்ததை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு திமுக மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி பிரச்சாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே. தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பைபற்றி கவலை இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழக சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதை தடுக்க என்ன செய்தது.
பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) என்ன செய்துகொண்டு இருந்தது. இந்த கையாலாகாத திமுக ஆட்சியை தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்துக்கு கூட வழிவகுத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழகத்தில் அமைதி திரும்ப, திமுகஅரசுக்கு முடிவுகட்ட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. 2022 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என திசைதிருப்பிய திமுக அரசு, தற்போது இச்சம்பவத்தை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? இவ்வாறு கூறியுள்ளனர்.