பிரச்சாரத்தின்போது வயதான பெண்மணி யின் கோரிக்கையை கேட்ட அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார்.
படங்கள்: ம.பிரபு
கடலோர பகுதியான ராயபுரம் தொகுதியில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 20 சுயேச்சைகள் உட்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - சுபேகர்கான்
திமுக வேட்பாளராக, மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கானின் மகன் சுபேர்கான் போட்டியிடுகிறார். மருத்துவரான இவர், கடந்த 5 ஆண்டுகளில் ராயபுரம் தொகுதியில் திமுக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராயபுரம் தொகுதி விஜயராகவலு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டாக்டர் சுபேர்கான்.
மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு கிடைக்க முயற்சி செய்வேன் என்று உறுதியளித்து வருகிறார்.
அதிமுக - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
இந்த தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தற்போது 8-வது முறையாக போட்டியிடுகிறார்.
மின்ட் பாலம் அருகே வீடுதோறும் சென்று மரக்கன்று வழங்கி வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் பாபு மைலன்.
தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொகுதியில் கொண்டுவந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - பாபு மைலன்
நாதக வேட்பாளராகப் போட்டியிடும் பொறியாளர் பாபு மைலன், தொகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் மரக்கன்றுகள் கொடுத்து பிரச்சாரம் செய்தது வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.
எம்.சி. சாலையில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் விஜய் தாமு
தமிழக வெற்றிக்கழகம் - விஜய் தாமு
தவெக வேட்பாளர் விஜய் தாமு, தொகுதி முழுவதும் விசில் அடித்தபடி வாக்கு சேகரித்து வருகிறார். நடிகர் விஜய்யின் பிரபலமே இவரது பலம். இளைஞர்கள் புடைசூழ பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக - அதிமுக சம பலத்துடன் உள்ள இத்தொகுதியில், வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார் என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது.