தவெக சின்னமான விசிலை ஊதி பிரச்சாரம் செய்த வேட்பாளர் புஸ்சி ஆனந்த்.

 

படங்கள்: எல்.சீனிவாசன்

தமிழகம்

தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் தியாகராயநகர் தொகுதியில், திமுக வேட்பாளராக ராஜா அன்பழகன், அதிமுக சார்பில் தி.நகர் சத்யா, தவெக சார்பில் புஸ்சி ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.அனுஷா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் எம்.எல்.ரவி, சுயேட்சை வேட்பாளர்கள் 21 பேர் என 26 பேர் களத்தில் உள்ளனர்.

சாலையோரம் உணவகம் வைத்துள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன்

திமுக - குடிநீர், பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகனான திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தி.நகர் பேருந்து நிலையத்தை சீர்படுத்தி அடுக்குமாடி வணிக வளாகத்துடன் கூடிய பார்க்கிங் வசதி, தட்டுப்பாடு இன்றி குடிநீர்வசதி, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இரண்டு பயிற்சி மையங்கள் அமைப்பது என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

          

அதிமுக - தி.நகரை தரம் உயர்த்த நடவடிக்கை

அதிமுக வேட்பாளர் தி.நகர் சத்யா, தி.நகரை வெளிநாட்டு தரத்துக்கு உயர்த்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு தடுத்தல், புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தி.நகர் சத்யா.

நாதக - மாற்றத்தை உருவாக்குவோம்

நாதக வேட்பாளரான வழக்கறிஞர் வி.அனுஷா, கட்சியின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் மக்களுக்கு விளக்கிச் சொல்வதோடு, மாற்றத்தை உருவாக்குவோம் என்பதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

கொள்கைகளை எடுத்துக்கூறி, பெண்களிடம் வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் வி.அனுஷா.

தவெக - புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும்

தவெக வேட்பாளர் புஸ்சி ஆனந்த், “தி.நகர் தொகுதியில் இந்த முறை நான் வெற்றி பெறுவது உறுதி.

மக்களுக்குத் தேவையான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்” என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோடை வெயில் தீயாய் பொசுக்கி வரும் தி.நகர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் மேலும் உக்கிரத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT