திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர்.
பொன்னேரி (தனி்) சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 13 பேர் களத்தில் உள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் - துரை.சந்திரசேகர்
காங்கிரஸ் வேட்பாளரான துரை.சந்திரசேகரை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அரசு திட்டப்பணிகள் குறித்தும், காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளை முன்வைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் பி.பலராமன்.
அதிமுக - பி.பலராமன்
அதிமுக வேட்பாளரான பி.பலராமனை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, காளியம்மாள், நடிகைகள் விந்தியா, கவுதமி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் எடுத்துரைத்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
கிராமங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜாத்தி.
நாம் தமிழர் கட்சி - ராஜாத்தி
நாதக வேட்பாளர் ராஜாத்தியை ஆதரித்து, சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். தொகுதி யில் சாலை, தெரு விளக்கு, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் அவ்வசதிகளை செய்து தருவேன் என உறுதியளித்து பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - ரவி
தவெக வேட்பாளர் ரவி, பொன்னேரி தொகுதியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும், ஆரணி பகுதியில் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் சாயப்பட்டறை, சாயக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும், மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
பொன்னேரி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். எவை மக்களைக் கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.