தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் விருப்பம் என காங்கிரஸ் எம்பி-யான விஜய் வசந்த் தெரிவித்தார்.
இது தொடர்பாக தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. அது மக்களுக்கான அரசாக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறிவருகிறது. அனைத்துத் துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வறுமை தீரவில்லை. இவற்றை சரிசெய்ய எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதால், ஆளுங்கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் செய்ய வேண்டும். யார் தீய சக்தி, யார் தூய சக்தி என்பது 2026 தேர்தலில் தெரியவரும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் விருப்பமாக உள்ளது.
மேலிட பொறுப்பாளரும், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. அப்போது, இந்தக் கோரிக்கை தொடர்பாக தலைமை முடிவெடுக்கும்” என்றார்.