சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்காக முதல்வர் விஜய்யை பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் போராட்டக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகரின் மேற்குப் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீரால் எதிர்காலத்தில் சென்னை பெருநகரமே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அரசிடம் எடுத்துக் கூறினோம்.
வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு
தற்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
எங்களது போராட்டத்துக்கு ஆதரவாக, எங்கள் கிராமத்தில் உள்ள பிரதான சாலைக்கு ஜோசப் விஜய் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
பரந்தூர் திட்டத்துக்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத் தப்பட்டு விட்டதாகவும், திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். அந்தத் தகவல் முற்றிலும் தவறானது.
மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல் கள் உண்மைக்கு மாறானவை. இவ்வாறு அவர் கூறினார்.