தமிழகம்

“அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பதால் விஜய்க்கு ஆதரவு” - பண்ருட்டி ராமச்சந்திரன் பளிச்

செய்திப்பிரிவு

“நடிகர் விஜய் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்வதால் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று எம்ஜிஆர் அதிமுக தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் எம்ஜிஆர் அதிமுக-வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பொதுச் செயலாளர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.

          

இந்தக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘‘தற்போதைய அரசியல் சூழலில் எளிய மக்களைப் பற்றி கவலைப்பட எந்தக் கட்சியும் இல்லை. வசதி படைத்தவர்கள் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவ்வாறே எளிய மக்களும் வாழ வேண்டும் என்பதே எங்களது கொள்கை. பிறக்கும் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். அவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். சமவாய்ப்புக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணாவின் கனவு.

தமிழக அரசு என்பது தற்போது பெயரளவிலேயே உள்ளது. உண்மையான அதிகாரம் புதுடெல்லியில் தான் இருக்கிறது. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 234 எம்எல்ஏ-க்கள் நிறைவேற்றும் தீர்மானம் சட்டமாக வேண்டுமெனில், ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை அதிகாரி (ஆளுநர்) கையெழுத்திட வேண்டியுள்ளது.

ஆளுநர் தான் ராஜாவாக இருக்கிறார். அவருக்கான அமைச்சர்களையே நாம் உருவாக்குகிறோம். முன்பு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள்; இப்போது இந்திக்காரர்கள் ஆள்கிறார்கள். ஒரு திரைப்படத் தணிக்கை விவகாரத்தில் கூட டெல்லி தலையிடுகிறது. 'ஜனநாயகன்' படத்தை இன்றுவரை வெளியிட முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் நமது அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெறுவதே தலையாய கடமையாகும்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், "ஜனநாயகன் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்களே, இதை விஜய்க்கான ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டதற்கு, "இதனை மத்திய அரசுக்கு எதிரான மனநிலையாகவும் எடுத்துக் கொள்ளலாம்; விஜய்க்கான ஆதரவாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என்றவர், “நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல.

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளோம். கொள்கையின் அடிப்படையில் ஊழலற்ற அரசியலை, சாதாரண மக்களுக்காக அரசியல் பேசுபவர்களை ஆதரிப்போம். தவெக தலைவர் விஜய் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்கிறார். அதனால் அவரை ஆதரிக்கிறோம்" என்றார்.

‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’’ என்று கேட்டதற்கு, "மற்ற கட்சிகளைப் போல் பேரம் பேசமாட்டோம். எங்கள் கட்சியில் உள்ளவர்கள் யாராவது போட்டியிட விரும்பினால் தவெக உடன் கலந்து பேசி அவர்கள் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்வோம்" என்றார்.

SCROLL FOR NEXT