படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரிய பூஜை பொருட்களை கோயில் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் ஒப்படைத்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்தது. இதனையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழுவினர் இன்று மதுரை அவனியாபுரத்திலுள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினர். பின்பு 11.24 மணியளவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.
பின்பு கோயில் மூலஸ்தானத்தில் சத்தியகீரிஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தனர். அங்கு ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் காட்டி மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்பு திருவாட்சி மண்டபம் முன்பு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரிய 3 மண் சட்டிகள், 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் அடங்கிய பூஜை பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜை செய்த பொருட்களை பின்னர் நீதிபதிகளிடம் ஒப்படைத்தனர். நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரிடம் தலா ஒரு மண் சட்டியை வழங்கினர்.
பின்னர் பூஜை பொருட்களை கோயில் பணியாளர்கள் சுமந்து வந்தனர். கோயிலிலிருந்து வெளியே வந்த குழுவினர் கோயிலிலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கிரிவல வீதிகளில் மேளம் தாளங்கள் முழஙகவும், பொதுமக்கள் பூக்கள் தூ்வி வரவேற்புடனும் மலையடிவாரப் பகுதியான கோட்டைத்தெரு பகுதிக்கு நடந்தே வந்தனர். அப்போது கிராம பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்கவும், பூக்கள் தூவியும் வரவேற்றனர்.
மலையடிவாரத்திற்கு வந்த நீதிபதிகள் தாங்கள் கைகளில் ஏந்தி வந்த மண் சட்டிகளை கோயில் பணியாளர்களிடம் ஒப்படைத்து தீபம் ஏற்றுவதற்கு மலைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். பின்பு நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். நீதிபதிகளிடமிருந்து மண் சட்டிகள் பூஜை பொருட்களை பெற்ற கோயில் பணியாளர்கள் தேங்காயில் சூடமேற்றி வழிபட்டு தரையில் போட்டு உடைத்தனர்.
பின்பு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாநகர போலீஸாரின் பலத்த சோதனைக்கு பின்னரே மதியம் 12.20 மணியளவில் மலையபடிவாரப் படிக்கட்டுகள் வழியாக மலைக்கு சென்றனர். அப்போது மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோயில் ஊழியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை எனவும், சிஆர்பிஎப் போலீஸாரிடம் பாதுகாப்பு பணிகளை ஒப்படைத்து விடுவோம் எனவும் அவர்களது முடிவுகளின்படி மலை உச்சிக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.
இதற்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து இனிகோ திவ்யன் புறப்பட்டார். பின்பு 10 நிமிடங்கள் கழித்துவிட்டு மீண்டும் மலைப் பகுதிக்கு சென்றார்.