கோப்புப்படம்
சென்னை: தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களையும் இணைக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சிவானந்தா சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதன்தொடர்ச்சியாக 4-வது நாளான நேற்று சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர்களாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறோம். ஆனால், கடந்த 2018-ம் ஆண்டில்தான் எங்களுக்கு காலமுறை ஊதியம் அறிவிக்கப்பட்டது. எனினும், ஓய்வூதியத் திட்டத்தில் அரசு இதுவரை எங்களை இணைக்கவில்லை. இதனால், வெறும் ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும் நிலை உள்ளது.
எனவே, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் எங்களையும் இணைக்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதுவரை 2 கட்டமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் 8,500 ஊராட்சி செயலாளர்கள் பணிக்குச் செல்லாமல் உள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் போராட்டம் தொடர்ந்தால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கப்படும். எனவே, எங்களது வாழ்வாதாரக் கோரிக்கையை ஏற்று, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசாணையில் ஊராட்சியையும் இணைக்க வேண்டும். மேலும் மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீஸார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாததால், அனைவரும் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.