பல்லாவரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அனகை டிமுருகேசன், அதிமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் வழக்கறிஞர் வி.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ஆர்.கார்த்திகேயன், தவெக சார்பில் ஜே.காமாட்சி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அதங்கராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் எஸ்.ரஹமத்துல்லா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 14 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேமுதிக -பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை: திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அனகை டி.முருகேசன். திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பாலியல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பெண்களுக்கான திட்டங்கள் தொடர தனக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஐஜேகே -அதிமுக அரசின் சாதனைகளை முன்னிறுத்தல்: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே வேட் பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன், தனது பிரச்சாரத் தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசால் இயலவில்லை என குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாதக -பெண்களுக்கு முக்கியத்துவம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் ஆர்.கார்த்திகேயன். "நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல, கட்சி கட்டமைப்பிலும் சமமான வாய்ப்பை வழங்குகின்றது. பெண்களுக்கென தனி சட்டப்பேரவை. பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்" என பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக - பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு: தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் ஜே.காமாட்சி. 'பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு. அடிப்படை பிரச்சினைகளுக்கு தவெக முக்கியத்துவம் அளிக்கும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 , திருமணத்துக்கு பட்டுப் புடவையுடன். ஒரு பவுன் தங்கம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க பல்லாவரம் தொகுதியில் வேட்பாளர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.