சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்க உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஏப்.2 முதல் 19-ம் தேதி வரை மாவட்ட வாரியாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஏப்.2-ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, 3-ம் தேதி வாணியம்பாடி, வேலூர், 4-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, விழுப்புரம், 5-ம் தேதி புதுச்சேரி, கடலூர், 6-ம் தேதி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, 7-ம் தேதி சேலம் மாவட்டம் வாழப்பாடி, கங்கவல்லி, ஆத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து 8, 9-ம் தேதிகளில் சென்னை மாவட்ட தொகுதிகள், 10-ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், 11-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், 12-ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், 13-ம் தேதி திருச்சி, திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, 14-ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, மதுரை, 15-ம் தேதி கரூர், திருப்பூர், 16-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், 17-ம் தேதி சேலம் மாவட்ட தொகுதிகள், 18-ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு, 19-ம் தேதி சேலம் மாவட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என கூறப்பட்டுள்ளது.