திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதை தடுக்க என்ன செய்தது?
திமுக அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) என்ன செய்துகொண்டு இருந்தது. இந்த கையாலாகாத திமுக ஆட்சியை தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்துக்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழகத்தில் அமைதி நிலை திரும்ப, திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், “திருப்பூரில் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி போலீஸார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலிஸார் என்ன செய்துகொண்டு இருந்தனர்?
தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. ஆனால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. பயங்கரவாதத்ததை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு திமுக மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஓயாது பிரச்சாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே. தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வி அடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு சம்பவமாகத் திசைதிருப்பிய திமுக அரசு, தற்போது இச்சம்பவத்தை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.