சென்னை: ‘இளைஞர்கள், மாணவர்களை அதிமுகவை நோக்கி ஈர்க்க வேண்டும்’ என்று திருச்சி, திருநெல்வேலி மாவட்ட அதிமுகநிர்வாகிகளுக்கு பொதுச்செய லாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது பழனிசாமி பேசியதாவது: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். ஜெயலலிதா காலத்திலும் வெற்றி, தோல்வியை எதிர்கொண்டார். திமுக 10 ஆண்டுகள் தோல்வியை சந்தித்து ஆட்சியைப் பிடிக்கவில்லையா? இதைஎல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சிலர் பதவிக்காகவும், பணத்தைக் காப்பாற்றவும் வேறு கட்சிக்குச் சென்று விட்டனர்.
மக்களின் பிரச்சினைகளை ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவற்றை நிவர்த்தி செய்ய அதிமுகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் நீங்கள் நேரடி தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே நாம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும்.
எனவே மக்களிடம் நேரடி தொடர்பில் இருங்கள். அவர்களது பிரச்சினைகளை ஓடோடி சென்று தீர்த்து வையுங்கள். அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறி, இளைஞர்களையும்.
மாணவர்களையும் அதிமுகவை நோக்கி ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்துடன் செயல்படும் இளைஞர் களுக்கு கட்சியில் பதவி கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
அதேநேரம் செயல்படாத நிர்வாகிகளின் பதவிகளை தயவு தாட்சண்யமின்றி பறித்து விடுங்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இதற்கிடையே, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பா.குமார் மற்றும் பரஞ்ஜோதி ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் இருவரும், சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவாக செயல்பட்டதால், இவர்களின் மாவட்டச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்கெனவே பறித்தது குறிப்பிடத்தக்கது.