சென்னை: வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த பட்ஜெட்டில், முக்கியமான திட்டங்களோ அல்லது விவசாயிகளுக்குப் பயனளிக்கும் புதிய அறிவிப்புகளோ எதுவுமில்லை.
தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க தேர்தல் அறிவிப்புகளை தவெக கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்துள்ள இந்த முதல் வேளாண் பட்ஜெட்டில் அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 'குடிமராமத்து' என்ற அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்து ஏரி, குளம், குட்டை என அனைத்தையும் தூர்வாரினோம்.
சுமார் 26,000 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால்தான், இன்றைய வறட்சிக் காலத்திலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்குக் கைகொடுக்கிறது.
ஆனால், தற்போதைய அரசு அத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல், பல துறைகளை இணைத்து வெறும் ரூ.1,500 கோடி மட்டும் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டுக்கு ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண் வழங்கினோம். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு ‘மைனஸ் பூஜ்ஜியம்’தான் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.