சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றது. இதில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பழனிசாமி தரப்பில் 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தது.
அதில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அவையில் நான் பேசினேன். ஆனால், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கவுள்ளோம்.
அதிமுகவுக்கு சில எம்எல்ஏக்கள் துரோகம் செய்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி சட்டத்துக்குப் புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர். 6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது.
அதனால்தான் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.
தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல்வர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நிலவும்போது ஒரு தரப்பினரைச் சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் தூய்மையா? எல்லா இயக்கங்களுக்கும் சோதனை வரும், பிரிவு வரும்.
ஆனால் எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்குச் செல்கிறார் தவெக விஜய். இது தவறான முன்னுதாரணம்.
108 இடங்களில் மட்டும்தான் தவெக வென்றது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் எண்ணிக்கை 107 ஆனது. ஓர் எம்எல்ஏ வாக்களிக்க முடியாததால் எண்ணிக்கை 106 ஆனது.
தேர்தல் பிரசாரத்தில் நான் திமுகவைத்தான் தாக்கிப் பேசினேன். அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்துத்தான். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் நிர்வாகிகளிடம் தவறான தகவலைச் சொல்கின்றனர்.
நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கட்சியின் அதிகாரம் என்னிடம்தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்குத்தான் உள்ளது. சட்டப் பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.