தமிழகம்

பழநி கோயில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டினுக்கு ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சேதுபதி, வெள்ளத்துரை, ஜெயபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி பி.வி.நாகரத்னா அமர்வில் இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசுத் தரப்பில், ‘துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் தரப்பில், ‘புலன் விசாரணையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் தமிழக அரசின் பதில் மனுவுக்கு தங்களது விளக்க மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT