பழநி: கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு கட்டண சேவைகள் மூலம் பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது தவிர, பஞ்சாமிர்தம் மட்டும் ரூ.63.16 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜை பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதம் விற்பனை, தங்க தொட்டில் பிரார்த்தனை மற்றும் தங்க தர புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக் கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பசலி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில், 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான கடந்த ஓராண்டில் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13,525 வருவாய் கிடைத்துள்ளது. பழநி கோயில் வரலாற்றிலேயே ஓராண்டு வருமானம் ரூ.100 கோடியை கடப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2021–22-ல் ரூ.41.97 கோடியும், 2022–23-ல் ரூ.80.62 கோடியும், 2023-24-ல் ரூ.86.06 கோடியும், 2024–25-ல் ரூ.97.32 கோடியும் கோயிலுக்கு வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மலைக்கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குதல், வாகன நிறுத்தம், கிரிவலப்பாதையில் பேட்டரி கார் வசதி உட்பட 28 கட்டணமில்லா சேவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கோயில் பிரசாதத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே ஆகும். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் டப்பாக்களில் விற்பனையும் செய்யப்படுகிறது.
கடந்த (பசலி) ஓராண்டில் மட்டும் பஞ்சாமிர்தம் மட்டும் ரூ.63 கோடியே 16 லட்சத்து 7,320-க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது என பழநி முருகன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார். பஞ்சாமிர்த விற்பனையை பொருத்தவரை 2021–22-ல் ரூ.29.88 கோடியும் 2022–23-ல் ரூ.50.49 கோடியும் 2023-24-ல் ரூ.54.81 கோடியும் 2024–25-ல் ரூ.57.42 கோடியும் கிடைத்தநிலையில் கடந்த 2025–26-ல்தான் அதிக அளவாக ரூ.63.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.