சென்னை: தேர்தல் நடைபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து வகை நிறுவனங்களுக்கும் தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தொழிலாளர் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்.9-ம் தேதியும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதியும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன்கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி - சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானம் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும், தேர்தல் நடைபெறும் ஏப்.9 (வியாழன்), ஏப்.23 (வியாழன்) ஆகிய நாட்களில் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Paid Holiday) வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வேலை அளிப்போர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் தெரிவிக்கலாம்: இதுதொடர்பாக புகார் அளிக்க தொழிலாளர் நலத் துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறைஅதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
அதிகாரிகளின் பெயர், செல்போன் எண் விவரம்: தொழிலாளர் இணை ஆணையர், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், சென்னை - எல்.ரமேஷ் (7904646090), சென்னை அமலாக்கப் பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர்கள்: முதல் வட்டம் - எல்.ஷோபனா (7299007334), 2-வது வட்டம் - பி.பழனி (7904802429), 3-வது வட்டம் - எஸ்.சிவக்குமார் (9043555123).இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.