குறவர் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

குறவர் இனத்தை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண் முகம் கோரியுள்ளார்.

குறவர் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு கேட்டுள்ள கூடுதல் விவரங்களை தமிழக அரசு விரைந்து அனுப்ப வலியுறுத்தி தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: தமிழகத்தில் குறவர் மக்கள் பழங்குடியினத்தவராக இருந்தும், மத்திய அரசால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாத காரணத்தால், பல உரிமைகளை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

குறவர் இனத்தின் 26 பிரிவினரும் பழங்குடியினர்தான் என்று பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் அறிக்கை சமர்ப்பித்து, அதை ஏற்று மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கங்களை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒரு தனி ஆணையத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் குற்றப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்கிற முறையில், இவர்கள் மீது வழக்கு பதிவது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT