பெ.சண்முகம்
சென்னை: “பிரச்சினைகள் குறித்த பகிர்வுகள் வெள்ளை அறிக்கையில் அதிகமாக இடம்பெற்று இருக்கிறதே தவிர, எதிர்காலத்தில் அவை எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பது பற்றிய குறிப்புகள் குறைவாக உள்ளன. 211 பக்க அறிக்கையில் "முன்னோக்கி செல்லும் வழி" என்பதற்கு இரண்டு பத்திகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன” என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு 211 பக்கங்களைக் கொண்ட (தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மீதான வெள்ளை அறிக்கை - பொது நிதி குறித்த ஆய்வு 2021 -26) வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள், பொது விவாதத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதாகவும், அரசின் எதிர்கால பொருளாதார முடிவுகளை மக்கள் கருத்தை உள்வாங்கி முன்னெடுப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
"ஒரு நோய்; ஆறு அறிகுறிகள்" என்று மாநில அரசின் கடன் பொறுப்பு, உயர்ந்து வரும் வட்டி செலவினம், வருவாய் பற்றாக்குறை, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சரிவு, அதிகமான ஒப்பளிக்கப்பட்ட செலவினம், மறை பொறுப்புகள் ஆகியன பற்றிய தகவல்களையும், கருத்துக்களையும் இந்த அறிக்கை பகிர்ந்து கொண்டுள்ளது.
பிரச்சினைகள் குறித்த பகிர்வுகள் அறிக்கையில் அதிகமாக இடம்பெற்று இருக்கிறதே தவிர, எதிர்காலத்தில் அவை எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பது பற்றிய குறிப்புகள் குறைவாக உள்ளன. 211 பக்க அறிக்கையில் "முன்னோக்கி செல்லும் வழி" என்பதற்கு இரண்டு பத்திகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நோய் அறிகுறிகள் மட்டுமின்றி அதை தீர்க்கும் மருந்துகளும் முக்கியமென்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம்.
அரசின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பது கவலையோடு குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் அரசு கடன் வாங்குவதை தனி நபர்கள் வருமானத்திற்கு மேல் செலவழிப்பதுடன் ஒப்பிடத்தக்கதல்ல. மாறாக, அத்தகைய கடன் எதற்காக வாங்கப்படுகிறது, எதற்காக செலவிடப்படுகிறது, அதன் பயன்கள் சமூகத்தில் யாருக்கு போய் சேர்கின்றன என்பதுதான் முக்கியம்.
அறிக்கையின் இறுதியில் 2026 - 27 ஆம் ஆண்டிற்கு 1,52,144 கோடி வரை கடன் தேவைப்படுகிற சூழல் ஏற்படலாமென்று தெரிவிக்கப்பட்டு இருப்பதும் கவனத்திற்குரியது. ஆனால், மாநில அரசுகளின் கடன் திறனுக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் என வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிவாளம் மாநில அரசுகளை நெறிப்படுத்துவதற்காக அல்லாது அவற்றின் செயல்பாடுகளை முடக்குவதற்கும், ஒன்றிய அளவில் அதிகாரங்களை குவிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே கடந்த கால அனுபவம். ஆகவே, இந்த வெள்ளை அறிக்கை நிதிக் கூட்டாட்சி மீதும் தனது கவனத்தை செலுத்தி தனது கருத்துக்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி முறைமையில் இழப்பீடு வழங்கல் என்பதை ஒன்றிய அரசு 2017 - 2022 காலத்தோடு நிறுத்தி விட்டதும், அதை நீட்டிக்க வேண்டுமென்ற மாநில அரசுகளின் கோரிக்கைகள், கோவிட் பேரிடர் பின்புலத்தில் கூட, ஒன்றிய அரசால் புறந்தள்ளப்பட்டதும், மாநிலங்களுக்கு பிரித்தளிக்கும் வரி தொகுப்பு பாஜக ஆட்சியில் சுருங்கி இருப்பதும், செஸ் - சர்சார்ஜ் ஆகியன 9.2 சதவிகிதமாக 2014 இல் இருந்தது தற்போது 14.1 சதவிகிதமாக அதிகரித்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாயை மாநிலங்களுக்கு பிரித்துத் தராமல் வஞ்சித்து வருவதையும் குறிப்பிடாமல் எப்படி ஒரு மாநிலத்தின் நிதி நிலைமை ஆய்வு அறிக்கை முழுமையடையும் என்ற கேள்வி எழுகிறது.
மொத்த வருவாயின் வரவுகளில் வட்டி செலவினம் மட்டுமே 23 சதவிகிதம் ஆகவும், மாநிலத்தின் சொந்த வரி வருமானத்தில் 35 சதவிகிதமாகவும் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டி இருப்பதோடு, மூலதனச் செலவினம் 11.8 சதவிகிதம் என குறைந்த விகிதத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி இருப்பது ஆய்வுக்குரியது. மூலதன செலவுகளை உயர்த்தாமல் வேலை வாய்ப்புகளை, மக்களின் வருமானத்தை உயர்த்த இயலாது என்பதால் இது மிக முக்கியமானது. இதற்கான வழிமுறைகள் எதிர்காலத்தில் ஆராயப்பட வேண்டும்.
வருவாயின் பற்றாக்குறை பற்றி அறிக்கை கூறும்போது, நிதிப் பொறுப்பு மசோதா பற்றி குறிப்பிட்டு அதன் இலக்கான ‘ஜீரோ’ சதவிகிதத்தை எட்ட முடியவில்லை என தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை என்பதே மோசமானது அல்ல. இதைச் சட்ட நிர்ப்பந்தமாக மாற்றியதே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், நவீன தாராளமயப் பாதையை விட்டு விலகிச் சென்று விடாமல் கண்காணிப்பதற்கே.
ஆனால், சாமானிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வருமான மேலாண்மை அமைய வேண்டும். வரிக் கசிவு பற்றி அறிக்கை பேசி, நடப்பில் உள்ள வரிவிகிதங்களை கொண்டே அதிக வரி வருமானத்தைத் திரட்டி இருக்க முடியும் என்று கூறி இருக்கிறது. இது முந்தைய அரசுகளின் மீதான குற்றச்சாட்டாக இருந்தாலும், புதிய அரசும் எதிர்காலத்தில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் வருமான அதிகரிப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது.
ஒன்றிய அரசு "மும்மொழிக் கொள்கை" நிபந்தனையை முன்வைத்து சமக்ரா சிக்ச அபியான் திட்டத்திற்கான ரூபாய் 5,000 கோடி தொகை வருமான எதிர்பார்ப்பு மதிப்பீட்டில் உள்ளது. ஆனால், அதைப் பெறுவது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய தொகை. ஆகவே, சாத்தியமற்றது என்கிற அரசின் கருத்து, மக்களைத் திரட்டுகிற முனைப்புக்கு பங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது.
அதுபோல மாநில அரசு ஊழியர்களின் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டத்திற்கான’ செலவுகளை ஈடுகட்ட கடன் வரம்புகள் உயர்த்தப்படுவது ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இதை மறுத்தால் மாநில அரசின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகளை விதிக்கும் செயல் என்பதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று வலியுறுத்த விழைகிறோம்.
அறிக்கையின் பல விவரங்கள் நவீன தாராளமய பாதை ஏற்படுத்துகிற நெருக்கடிகளை உணர்த்துவதாக உள்ளன. சில துறைகளின் நிதி நிலைமைகளில் கூட அது பிரதிபலித்துள்ளது. உதாரணமாக, போக்குவரத்துத் துறை பணியாளர் செலவினம் 5 ஆண்டுகளில் 43 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
உண்மை மதிப்பு உயர்வெனில் - அதாவது பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் - உயர்வு 10 சதவிகிதமாகவே இருக்கிறது. ஆனால், எரிபொருள் செலவினம் 185 சதவிகிதமாக இருந்துள்ளது. இது ஒன்றிய அரசு பெட்ரோலிய விலைகளில் கையாளும் கொள்கையின் விளைவே.
அரசமைப்பு சட்டத்தின் 293 (3) விதித்திருக்கும் மாநில அரசின் கடன் பெறும் தகுதி வரம்பான மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்தை தளர்த்தி கூடுதல் கடனை ரூபாய் 7000 கோடி வரை அனுமதிக்க மாநில அரசு ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை.
நவீன தாராளமயப் பொருளாதார பாதையின் எந்த ஒரு அம்சமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் மீது திணிக்கப்படுவதும், நிதிக் கூட்டாட்சி தாக்கப்படுவதும் ஏற்க இயலாது என்று தமிழ்நாடு அரசு அறுதியிட்டு தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
புதிய அரசு மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. நவீன தாராளமய பொருளாதார பாதை உருவாக்குகிற பிரச்சனைகளுக்கு அடிப்படைத் தீர்வுகளை தேடுகிற அதே நேரத்தில் சாதாரண எளிய மக்களுக்கான நிவாரணங்களும் மிக முக்கியமானது.
ஆகவே தமிழ்நாடு வெற்றிக் கழகம் தேர்தலின் போது அளித்துள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவது அவசியம் என்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்டுகிறது.
எனவே, இந்த அறிக்கை விரிந்த கோணத்தில் விவாதிக்கப்படுவதும், மாற்று பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பல்வேறு பிரிவினர் மத்தியில் கலந்தாலோசித்து மாற்று வழிமுறைகளை உருவாக்குவதும், நிதிக் கூட்டாட்சி உரிமைகளை நிலைநிறுத்த தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் திரட்டப்படுவதும் காலத்தின் தேவை. மேலும், மாநில அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.