சென்னை: தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை இயற்ற வைப்போம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உருவாக்கப்பட்ட “இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் கவுரம் என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு மசோதா தமிழ்நாடு - 2026 மாதிரி சட்டம்”, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சாதிய படுகொலைகள் என்பது தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.
சாதி, மத மறுப்பு திருமணங்களை செய்தவர்கள் எப்போது, என்ன நடக்கும் என்று தெரியாமலே ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாதிய படுகொலையை தடுக்க தமிழக அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரைகளை வழங்கியிருந்தும், அவை எதுவும் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக, கடந்த ஆட்சியில் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்ற விரிவான மனுக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணையம் விரைவாக பரிந்துரைகளை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். அதைக் கொண்டு, தமிழக அரசு சாதிய படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தவெக அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றுமா? இல்லையா என்பது கேள்வியல்ல. அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்து, இச்சட்டத்தை நிறைவேற்ற வைப்போம். அதேபோல், சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதன்மூலமே, சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க முடியும். இன்றைக்கு வெளியிடப்பட்ட மசோதாவில் சாதி மறுப்பு திருமணத்தில் உள்ள சிரமங்கள், சட்ட ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த மசோதாவை ஆணையத்திடமும், முதல்வரிடமும் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, தலித் விடுதலைக்கான தேசிய மேடை அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.