தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
தாராபுரம்: தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிக்கட்சிகள்தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும், உறுதிமொழியும் அளிக்கப்படாமல்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் 2 வேட்பாளர்களும் ராஜினாமா செய்தார்களா, இதற்கு முதல்வர் விஜய்யோ அல்லது மற்ற அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை.
மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்வது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்றுதான். சொல்லப்போனால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிக் கட்சிகள்தான்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மையில்லாதபோது வராமல் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பின்னரே இருவரும் தவெக வந்தனர். அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ந்து எதிர்க்கிறோம். அவர்கள் உள்பட ஏனைய வேட்பாளர்களையும் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.