ப.சிதம்பரம்

 
தமிழகம்

“கருத்து கூறியதற்காக வழக்கு பதிவு செய்வது தவறு” - ப.சிதம்பரம்

இ.ஜெகநாதன்

காரைக்குடி: “கருத்து கூறியதற்காக வழக்கு பதிவு செய்வது தவறு. விபரீதமான முறையில் பேசினால் நடவடிக்கை எடுக்கலாம். இடைத்தேர்தலில் தவெக வாக்கு வங்கி பாதிக்கப்படாமல் அதிகரித்துள்ளது” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. போர்ச் சூழல், எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

அதைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழக அரசு அரிசியை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ஏழை, நடுத்தர மக்களுக்கு விற்பனை செய்யலாம்.

மத்திய அரசின் நிலைப்பாட்டால் நாடு முழுவதும் தேசிய வேலையுறுதித் திட்டம் முடங்கியது. நகர்ப்புற, கிராமப்புற மக்களின் வருமானம் தேக்கமடைந்ததால், வாங்கும் சக்தி குறைந்துள்ளது; குடும்பங்களின் கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

26 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் 13.30 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் அழுத்தம், உச்ச நீதிமன்றம் தலையீட்டைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் ‘பல்டி’ அடித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் மத்திய நிதிக் குழு மானிய நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதோடு, நகர், ஊரக அமைப்புகளுக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பது ஏற்கெனவே உணரப்பட்ட பிரச்சினை. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் அரசு ஆலோசிக்க வேண்டும். சென்னையில் மழைக்கால வெள்ளம் என்பது நீண்டகாலப் பிரச்சினை. யாரையும் தனிநபர் தாக்குதல் செய்வது தவறு; கருத்துக்கு கருத்துதான் தெரிவிக்க வேண்டும்.

தனிநபர்களைத் தாக்கிப் பேசுவதை ஏற்க முடியாது. அதேநேரத்தில், கருத்து கூறியதற்காக வழக்குப் பதிவு செய்வதும் தவறு. விபரீதமான முறையில் பேசினால் நடவடிக்கை எடுக்கலாம்; கருத்துக்கு கருத்து தெரிவிப்பதே சரியான அணுகுமுறை.

தற்போது, பத்திரப்பதிவு, வருவாய், மின்சாரத் துறைகளில் கையூட்டு குறைந்துள்ளது. அதிகாரிகள் அச்சத்துடன் செயல்படுகின்றனர். நகராட்சி, ஊராட்சிகளுக்கு தேவையான நடப்பாண்டு நிதியினை தமிழக அரசு வழங்க வேண்டும். இடைத்தேர்தலில் தவெக வாக்கு வங்கி பாதிக்கப்படாமல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT