ப.சிதம்பரம்

 
தமிழகம்

“அதிமுக வெறும் முகமூடி தான்... பாஜக தான் முகம்!” - ப.சிதம்பரம் விமர்சனம்

இ.ஜெகநாதன்

காரைக்குடி: “அதிமுக வெறு முகமூடி தான்; பாஜக தான் முகம்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை அறிமுகப்படுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசிவது: “நிதிஷ்குமார் நீண்ட நாட்களுக்கு முதல்வராக இருக்க மாட்டார் என்று நான் அன்றே சொன்னேன். மாநில கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகவின் பழக்கம். அதேபோல் அதிமுகவையும் தூக்கி எறிந்துவிடுவர்.

          

இந்த தேர்தல் 2 கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. அது தமிழக கலாச்சாரத்துக்கும், வடமாநில கலாச்சாரத்துக்கும் இடையேயான மோதல். சனாதனம் நல்ல பெயராக இருக்கலாம். அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சனாதனம் விரும்புவோர் விரும்பட்டும். சைவ உணவை சாப்பிடுபவர் சாப்பிடட்டும். சமஸ்கிருதம் ஆதி மொழி என நம்புவோர் நம்பட்டும். ஆனால், அதற்காக மற்றவர்களிடம் திணிக்கக் கூடாது.

அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதைவிட, பாஜக நுழைந்துவிடக் கூடாது என நினைக்க வேண்டும். பாஜக வந்துவிட்டால் தமிழ் பண்பாடு, வரலாறு எல்லாம் புதைக்கப்படும். இது கட்சி, அணிக்கான போட்டி கிடையாது. கொள்கை, பண்பாடு, கோட்பாடுக்கான போட்டி.

தமிழகத்தில் பாஜக வந்தால் ஆதிக்க சக்திகள் வந்துவிடும். அதிமுகவால் பாஜகவை ஒரு அங்குலம் கூட மீற முடியாது. அதிமுக வெறும் முகமூடி தான்; பாஜக தான் முகம்.

காரைக்குடி தொகுதியில் எம்பி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பைசா கூட கை வைக்காமல் செலவழிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் 5 ஆண்டுகள் எம்பியாக இருந்தார். அவர் ஒரு காரியத்தை உருப்படியாக செய்தாரா? நாங்கள் காரைக்குடியில் சட்டக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, தமிழுக்கான நூலகம் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளோம்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT