தமிழகம்

​டாஸ்​மாக் உடன் இணைந்த பார்களை மூடு​மாறு உத்​தரவு: உரிமை​யாளர்​கள் எதிர்ப்​பு

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்​மாக் உடன் இணைந்த பார்​களை மூட டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது, இதற்கு பார் உரிமை​யாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்ததால் இன்று மீண்​டும் ஆலோ​சனை நடை​பெறவுள்​ளது.

தமிழகத்​தில் தற்​போது 4,000 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 2,700 கடைகள் பார் வசதி​யுடன் செயல்​படு​கின்​றன. கடைசி​யாக கடந்த 2023-ம் ஆண்டு பார்​களுக்​கான டெண்​டர் விடப்​பட்​டு, அதன் ஒப்​பந்த காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காரண​மாக, புதிய டெண்​டர் விடப்​ப​டா​மல், ஒப்​பந்த காலம் மேலும் 6 மாதம் நீட்​டிக்​கப்​பட்​டது. அந்த நீட்​டிப்​பும் ஜூன் 30-ம் தேதி​யுடன் முடிவடைந்த நிலை​யில், ஒப்​பந்​தத்தை மேலும் 3 மாதங்​கள் நீட்​டித்​து, இடைப்​பட்ட காலத்​தில் பார்​களை நவீன முறை​யில் வடிவ​மைத்​தும், டெண்​டர் நடை​முறை​களில் மாற்​றம் கொண்டு வந்​தும் பின்​னர் டெண்​டர் விட டாஸ்​மாக் தரப்​பில் முடிவு செய்​யப்​பட்​டது. இதுகுறித்து பார் உரிமை​யாளர்​களிட​மும் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மது​விலக்​குத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தலை​மை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பார்​களை உடனடி​யாக மூட உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், பார் உரிமை​யாளர்​கள் டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரை சந்​தித்​து, பார்​களை மூடும் உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர். மேலும், பார் உரிமை​யாளர்​களுக்கு முன்​கூட்​டியே தெரிவிக்​காமல் உடனடி​யாக மூட உத்​தர​விட்​டால், பார் தொழிலை நம்பி இருக்​கும் ஒரு லட்​சம் பணி​யாளர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள் என்​றும் கூறினர். எனவே, இந்த உத்​தரவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

இந்​நிலை​யில், பார் உரிமை​யாளர்​களு​டன் டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் அதி​காரி​கள் இன்று ஆலோ​சனை நடத்த உள்​ளனர். இந்த கூட்​டத்​தில் புதிய டெண்​டர் அறி​விப்​பதா அல்​லது கால நீட்​டிப்பு வழங்​கு​வதா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்பட உள்​ளது. பின்​னர், அமைச்​சருடன் ஆலோ​சித்து இறுதி முடிவு எடுக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, பார்​களை மூட உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்ட நிலை​யில், ‘பொது இடங்​களில் மது அருந்​து​வதை தடுக்க காவல் துறை மூலம் கண்​காணிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். அதை மீறி பொது இடங்​களில் மது அருந்​து​வோர் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்​’ என்​று தமிழக அரசு எச்​சரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT