புதுச்சேரி: போலி மருந்து வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம் தந்த விவகாரத்தில் போலி மருந்து நிறுவன அதிபர் ராஜா என்ற வள்ளியப்பனை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் புதுச்சேரியில் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை நடத்தி, ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ராஜா வீட்டில் நடத்திய சோதனையில் பல கோடிக்கு சொத்து ஆவணங்கள், தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த வழக்கின் விசாரணை எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா, ராணா, மெய்யப்பன், விவேக் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி என 4 பெண்கள் உள்பட 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜாவுக்கு பல மாநிலங்களில் தொடர்பு இருந்ததால், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனிடையே ராஜா உள்பட 26 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்தநிலையில்தான் வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக ராஜாவை சிபிஐ லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து கைது செய்து, டெல்லி அழைத்துச் சென்றனர்.
இதுபற்றி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: சிபிஐ பதிவு செய்துள்ள இரு வழக்குகளிலும் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க டெல்லியில் சில போலீஸ் அதிகாரிகளை ராஜா சந்தித்துப் பேசியுள்ளார். போலீஸ் தரப்பில் ரூ.3 கோடி பேரம் பேசப்பட்டு, இறுதியாக ரூ.2 கோடி என முடிவானது.
கடந்த 6-ம் தேதி இந்தப் பணத்தை ஹவாலா முறையில் டெல்லியில் பட்டுவாடா செய்யும் பொருட்டு, சென்னையைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் ரூ.1 கோடியை ராஜா கொடுத்துள்ளார். அவர் ராஜாவின் நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் மூலம் டெல்லியில் உள்ள ஹவாலா ஏஜென்டை சந்தித்தார்.
அந்த ஏஜெண்ட் கொடுத்த பணத்துடன், தான் கொண்டு சென்ற ரூ.1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியை டெல்லி காவல் ஆய்வாளர் பிரவின்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது, சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவினர், பிரவின்குமாரையும் ராஜ்குமாரையும் கையும்களவுமாக கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை சிபிஐ லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு கடந்த 8-ம் தேதி சென்னையைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்ட் நாகூரானை கைது செய்தது. இதேபோல் முக்கிய குற்றவாளியான ராஜாவை புதுவையில் நேற்று முன்தினம் கைது செய்தது. இதன்பின் புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி 50 பவுன் நகை, ரூ.40 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியது. பின்னர் ராஜாவை புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லிக்கு அழைத்து சென்றனர். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.