சென்னை: சென்னை மெட்ரோ ரயில், உடன்குடி அனல் மின் திட்டம், என்எல்சி சுரங்க விரிவாக்கம், கடலூர், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்பட தமிழகத்தில் 7 திட்டங்களுக்காக நிலங்களை கையகப் படுத்த தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மானாடு தண்டுபத்து கிராமத்தில் உடன்குடி அனல்மின் திட்டம் நிலை-2, 3 ஆகிய பணிகளுக்காக 9.3 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
உடன்குடி கிராமம் அலகு 2, பிளாக் 1 பகுதியில் 11.59 ஹெக்டேர் புஞ்சை நிலம், பிளாக் 3 பகுதியில் 10.8350 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மானாடு தண்டுபத்து (ஆர்) கிராமம், அலகு 5, பிளாக் 2 பகுதியில் 11.0950 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படு கிறது. இந்த நிலங்களில் தென்னை, பனை, வேம்பு உள்ளிட்ட மரங்கள், கிணறுகள், மின் கம்பங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உள்ளன.
கடலூர் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வானதிராயபுரம் கிராமம் குறிஞ்சிப்பாடி வட்டம் பகுதியில் 1.28 ஹெக்டேர், கங்கை கொண்டான் கிராமம் விருத்தாசலம் வட்டம் பகுதியில் 5.04 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
இந்த நிலங்களில் வீடுகள், தென்னை, தேக்கு உள்ளிட்டவை இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தியாகவல்லி கிராமத்தில் அலகு-1, பிளாக்-1 பகுதிக்கு 11.58 ஹெக்டேர், பிளாக்-3 பகுதிக்கு 14.56 ஹெக்டேர், பிளாக்-2 பகுதிக்கு 9.04 ஹெக்டேர், குடிகாடு கிராமத்தில் 30.5 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 அமைக்க 22.16 ஹெக்டேர் நிலம்கையகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எழும்பூர் வட்டம் பகுதியில் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க 24 சதுரமீட்டர் காலியிடம் கையகப்படுத்தப்படு கிறது.
தூத்துக்குடி கோவில்பட்டி வட்டம், தோணுகால், நாலாட்டின்புதூர் கிராமங்களில் விமானப் பயிற்சி நிறுவனம் அமைக்க மொத்தம் 2.98 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம், என்எல்சி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை வழங்கும்.
நிலம் கையகப்படுத்துதல் குறித்த திட்ட வரைபடங்கள், ஆவணங்களை தூத்துக்குடி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் சிறப்பு வட்டாட்சியர் (நில எடுப்பு) அலுவலகங்களில் வேலை நாட்களில் பொதுமக்கள் நேரில் பார்வையிடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக் கடவு வட்டம், கோடங்கிபாளை யம் கிராமத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 4.31 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.