தமிழகம்

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தம்பி குடும்பத்தை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையை பெற தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய் வில்சன் தம்பி மரிய குளோத் வீடு உள்ளது. அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி, அமைச்சர் மரிய வில்சன், மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் (41) தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையில் புகார் பதிவானது.

அமைச்சரின் சகோதரர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) வழக்குப் பதிவானது.

இது தொடர்பான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரிய வில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்தச் சூழலில் மரிய வில்சன் வென்று தமிழக நிதியமைச்சரானார். தொடர்ச்சியாக நீதிமன்ற வாய்தாவுக்கு அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாத நிலையில், இவ்வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில், குற்றப்பத்திரிக்கையை நேரில் ஆஜராகி பெற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஜூலை 4-ம் தேதி புதுச்சேரி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகுமாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT