சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதர 34 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மேலும் ‘ரெட் அலர்ட் ’ விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கையைச் சென்னை
வானிலை மையம் இரவு வாபஸ் பெற்றது. இந்நிலையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 34 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில், மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதில் இருந்து தமிழகக் கடலோரம் வரை வடமேற்கு வங்கக்கடல் வழியாகச் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.19) சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 34 மாவட்டங்களில் (மஞ்சள் அலர்ட்) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
நாளை 20-ம் தேதி தேனி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இடை இடையே ஓரிரு முறை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பாரி முனையில் 36 செ.மீ. கத்திவாக்கத்தில் 34 செ.மீ. சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ. திருவொற்றியூர், எண்ணூரில் தலா 22 செ.மீ. எம்ஜிஆர் நகரில் 19 செ.மீ. தண்டையார்பேட்டை, பெரம்பூரில் தலா 18 செ.மீ. வடபழனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மழை பெய்யும் நேரத்திலும் தேங்கி இருக்கும் நீருக்கு அருகிலும் பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளம் தேங்கியுள்ள இடங்களில் குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், பொறுப்பு அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 36 செ.மீ. மழை பெய்தும்கூட எங்கும் மழைநீர் தேங்காத அளவுக்குத் தமிழக அரசு பணியாற்றியுள்ளது. சென்னையில் தேவையான அளவு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விமான சேவை பாதிப்பு: சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதனால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் வந்து தரையிறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. சிறிது மழை குறைந்ததும், வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள், ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
முன்னதாக, கொல்கத்தாவில் இருந்து 184 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை, கொச்சி, மும்பை, பெங்களூரு, புனே, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, ஃபிராங்க்பர்ட், அபுதாபி உள்ளிட்ட சர்வதேச விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை காலதாமதமாகப் புறப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் பலத்த மழை காரணமாக ஏரோபிரிட்ஜ் வசதி இல்லாமல் திறந்தவெளி பகுதியில் விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதனால், பிக்-அப் வாகனங்களில் ஏறுவதற்கு பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
செல்போன்களில் எச்சரிக்கை: ‘செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பிய ஒரு எச்சரிக்கையை, நேற்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை ஒலியுடன் தகவல் அனுப்பியது. அதில் “சென்னையில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” என்று எச்சரிக்கப்பட்டது.