தமிழகம்

திமுகவில் சேர்ந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

எம்எல்ஏ பதவி ராஜினாமா

செய்திப்பிரிவு

பழனிசாமி தலைமையிலான அதிமுக செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதனால் தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். முன்னதாக எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக செல்வாக்குமிக்க நபராக வலம் வந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்எல்ஏ.க்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து அப்போதைய அதிமுக ஆட்சிக்கு பக்கபலமாக இருந்தார். 2021 சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

          

அதன்பின் அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை விவகாரம் பெரிதாகி, பொதுச் செயலாளர் பொறுப்பை பழனிசாமி தன்வசமாக்கி கொண்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கி, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென கூறிவந்தனர். அதன் இணை ஒருங்கிணைப்பாளராகவும் வைத்திலிங்கம் இருந்தார். மேலும், சமீபத்தில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகமாக மாற்றப்பட்டது.

இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சி கைகூடாத நிலையில் அதிருப்தியில் இருந்த வைத்திலிங்கம் திமுகவில் சேரப் போவதாக சில வாரங்களாகவே தகவல்கள் பரவின. மறைந்த எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழாவை வைத்திலிங்கம் கொண்டாடாததும் அதற்கு வலுசேர்த்தது. இந்நிலையில் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வைத்திலிங்கம் சென்னை அறிவாலயத்தில் திமுகவில் நேற்று இணைந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

“பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரம்தான் இருக்கிறது. அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், நான் தனியாக இணைய விரும்பவில்லை. அதனால் அதை நிராகரித்துவிட்டேன்.

அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானதால் ஓபிஎஸ்சை விட்டு விலகி வந்துள்ளேன். ஓபிஎஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைதான் கேட்க வேண்டும். தமிழகத்துக்கு தற்போதைய தேவை திமுகதான்” என்று கூறினார்.

வைத்திலிங்கத்தை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளரான குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ஜன.26-ம் தேதி திமுகவில் இணைகிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் ஏற்கெனவே இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது. வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு, எம்எல்ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர்.

தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கமும் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 62 ஆக குறைந்துள்ளது. மேலும், அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேற்றத்தால் ஒபிஎஸ் கூடாரமே காலியாகிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT