தமிழகம்

இபிஎஸ்ஸுக்கு ஷாக் கொடுப்பாரா ஓபிஎஸ்? - நவ.24-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அதிமுக-வை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் 24-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதில் என்ன ‘புரட்சிகரமான’ முடிவை எடுக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடுத்த மூவ் குறித்து கலர் கலராய் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்டு ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்த முக்கிய தலைகளில், ஒரத்தநாடு வைத்திலிங்கமும், முதுகுளத்தூர் ராமர் எம்பி-யும் தான் தற்போது மிஞ்சி நிற்கிறார்கள். அதிலும் வைத்திலிங்கம் எந்த நேரத்திலும் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேசமயம், யாரைச் சேர்த்தாலும் ஓபிஎஸ், தினகரனை கட்சிக்குள் விடவே மாட்டேன் என்று கறாராய் நிற்கிறார் இபிஎஸ். என்றாலும் இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை இன்னமும் கைவிடவில்லை பாஜக. இதனால் இன்னும் காலம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இபிஎஸ், மெதுவாகவே அடி எடுத்து வைக்கிறார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டவிருப்பது குறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், ‘‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான உத்திகள் குறித்து பேசவிருக்கிறார்கள். எங்களது முதல் நோக்கம், தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வை ஒருங்கிணைப்பது.

பழனிசாமி அதற்கு இனியும் தடையாக இருந்தால் தினகரன், செங்கோட்டையனுடன் இணைந்து எங்களுக்கு வாய்ப்புள்ள கூட்டணியில் இடம்பிடித்து பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை காலிசெய்து அவருக்கு நாங்கள் யார் என்பதை புரியவைப்போம்.

இதன் மூலம், தேர்தலுக்குப் பிறகுஅதிமுக-வை ஒருங்கிணைப்பது எங்களின் அடுத்த நோக்கமாக இருக்கும். அதற்காக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை எல்லாம் செய்வோம்” என்றனர்.

இதனிடையே, தனது போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று ஓபிஎஸ் சொல்லி இருந்தாலும் போடிக்கு பதிலாக திருவாடானை தொகுதியில் போட்டியிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்லும் சிலர், அதற்காக அவரது குடும்பத்தினர் அங்கே சில முன்னேற்பாடுகளை செய்துவருவதாகவும் சொல்கிறார்கள்.எது எப்படி இருந்தாலும் இம்முறையாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் அதிரடியாக எதையாவது பேசி இபிஎஸ்ஸுக்கு நிஜமாகவே ஷாக் கொடுக்கிறாரா(!) என்று பார்க்கலாம்.

SCROLL FOR NEXT