பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தனது அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:
நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் வதந்திகளை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்கள் செய்தியாக வெளியிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்டவே மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன்.
அந்தத் தேர்தலில் 12 நாட்கள் தான் எனது தேர்தல் பிரச்சாரம் இருந்தது. அப்போது 6 ஓ.பன்னீர்செல்வங்களை நிறுத்தினார்கள். எப்படியாவது ஓபிஎஸ்ஸை தோற்கடித்து, தொண்டர்களும் மக்களும் அவர் பக்கம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி தான் அது என்பதைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
அந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து சட்டப் போராட்டத்தின் மூலம் அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்டெடுப்பது தான் எங்கள் நோக்கம். தனிக் கட்சி தொடங்குவது குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை ஒருங்கிணைக்கவும், யாராலும் வெல்லமுடியாத சக்தியாக அதிமுக-வை எப்படி ஜெயலலிதா உருவாக்கினாரோ அத்தகைய சூழலை மீண்டும் உருவாக்கவும் தான் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே, தேவை இல்லாத குழப்பங்களை தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம். தேனி மாவட்டம் அதிமுக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு பேரை முதலமைச்சராக ஆக்கியது தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதை நானும் என்னோடு சேர்ந்த 88 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலையாய கோரிக்கையாகக் கொண்டு போராடி வருகிறோம்.
எதிரும் புதிருமாக இருந்த டிடிவி.தினகரனும் இபிஎஸ்ஸுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாங்களும் ஒன்றிணையத் தயாராய் இருக்கிறோம். டிடிவி.தினகரன் இதை அவரது அருமை அண்ணன் இபிஎஸ்ஸிடம் வலியுறுத்த வேண்டும். அப்படி இணைந்தால் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர எங்களுக்கு அழைப்பு வந்ததா என்பது பரம ரகசியம். நான் இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கக் காரணமே இப்போது திமுக-வில் இருக்கும் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் தான். நான் தவெக அல்லது திமுக-வில் இணையப் போவதாக வதந்திகளை பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். எங்களைப் பார்த்தால் பாவமாகத் தெரியவில்லையா... தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகிறீர்கள்.
குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே சில செய்திகளை வெளியிடுகிறார்கள். அதிமுக-வில் ஒன்றிணைய நான் ரெடியாக இருக்கிறேன். டிடிவி.தினகரனும் இபிஎஸ்ஸும் ரெடியா என்று கேட்டுச் சொல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.