2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. பழனிசாமியை விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்-சின் பண்ணை வீட்டில் செய்தியாளர்கள் முகாமிட்டனர். அங்கிருந்து போடியில் உள்ள தனது அலுவலகத்துக்கு புறப்பட்ட ஓபிஎஸ்-சிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவை அறிவிக்கிறேன் என்று ஒற்றை வரி பதிலை மட்டும் கூறிவிட்டு வேகமாகச் சென்றார்.
இதனிடையே, தேனி மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் தலைமையில் இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதில் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டணி குறித்தும் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்துக்குப் பிறகாவது ஓபிஎஸ் மவுனம் கலைப்பாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும், தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். வருகிற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவீதமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், ஓபிஎஸ்ஸை விட்டுவிடாமல் எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.